Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…
, வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (16:48 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிஞர் கோபால்தாசன் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு...


ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்…
நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்…

பொதுவாய்
காரியமானால் கழற்றி விடுவர்…
அது எனக்கும் பொருந்தும்
உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான்
இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்…
என் நான்கு கால்களும்
இரண்டு கைகளும்
பணிவிடைகள் செய்தே அசந்து போயின…

ஊதியமின்றி உழைத்தது
அவர் என் மீது வைத்த கரிசனம்
நான் அவர் மீது கொண்ட விசுவாசம்..

இருந்தாலும்
அவரின் முதுமையையும் நோயையும்
நன்கு அறிந்து செயல்பட்டதால்…

எனக்கு எந்த ஒரு விருதும் சிலையும் வைக்க வேண்டாம்..
அதை நான் கேட்கவுமில்லை…

பகுத்தறிவு வாதமும் சித்தாந்தமும் யாருக்கு வேண்டும்
என்னுடைய மூச்சும் பேச்சும் மனித நேயம் மட்டுமே!

அவர் விடும் மூச்சுக் காற்றில் இருந்து தும்மும்
எச்சில் துளிகளைக் கூட
பொறுமையுடன் வாங்கிக் கொண்டவன்

கட்சிக் காரர்கள் உறவினர்கள் என யார் வந்தாலும்
என் தோள்கள் வளைந்து கொடுத்து
ஈடு கொடுத்தன
என் தோழமையைவிட
அந்த முதலமைச்சர் நாற்காலி கை கூடாமல் போனதுதான்
துரதிர்ஷ்டம்…

என்ன செய்வது..
என்னோடு அவர் வாழ்ந்த தினங்கள் குறைவு என்றாலும்…

பழகிய பேசிய நாள்கள் அதிகம்..
நான் செல்லாத விழாக்கள் இல்லை
அவர் ரசிக்காத கருத்துகள் இல்லை..


கவிஞர் கோபால்தாசன்
நானின்றி அவரில்லை
அவரின்றி நானில்லை…
அவர் தமிழ்ப் பற்றும் நாட்டுப் பற்றும்
என்னை ஆட்கொண்டு விட்டதால்…
பிரிக்க முடியா உடலாகி விட்டேன்…
தற்போது வெறும் உடலாகத்தான் கிடக்கிறேன்…
உயிர் அவரோடு இணைந்து விட்டதாய் உணர்கிறேன்..

நண்பர்களே…
இனிவரும் காலங்களில்
அவருக்கு  நினைவில்லமோ
மணிமண்டபமோ எழுப்புவீர்களேயானால்…
அவரோடு வாழ்ந்த எனக்கொரு இடம் கொடுங்கள்…
அது போதும்…!!

 *கவிஞர் கோபால்தாசன்*

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமனார், மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: சிக்கிய டிரம்ப்!