Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குவாட்டரும் ஸ்கூட்டரும் தரமாட்டேன், ஆனால்..கமல்ஹாசனின் முழு பேச்சு

குவாட்டரும் ஸ்கூட்டரும் தரமாட்டேன், ஆனால்..கமல்ஹாசனின் முழு பேச்சு
, வியாழன், 22 பிப்ரவரி 2018 (06:00 IST)
`நான் தொடங்கியிருக்கும் நியாப்போரின் படை இது. அவர்களை அறிமுகப்படுத்துவதில் பேரானந்தம். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக பேசலாம். 37 வருடங்களாக நற்பணியைச் செய்துகொண்டிருந்தோம். நாமும் நற்பணியை மட்டும் செய்துவிட்டு போகலாம் என்று நினைத்த போது, அதற்கும் இடைஞ்சல் செய்தார்கள். அதை யார் செய்தார்கள் என்று இப்போது கூற விரும்பவில்லை.
 
நான் பேச தயங்கியதை கெஜ்ரிவால் வெளிப்படையாக பேசியுள்ளார். மேடை நாகரீகம் கருதி பிறகு பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், கெஜ்ரிவால் அதைத் தொடங்கி வைத்துவிட்டார். எனது நேரமின்மையும், மக்களின் நேரமின்மையும் அவருக்குத் தெரியும். நான் மதிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசும்போது `உங்கள் கட்சிக் கொள்கை என்ன’ என்று கேட்டார். இடதா, வலதா என இஸங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதே கொள்கை என்றேன். உடனடியாக செயலில் இறங்குங்கள் என்று அவர் வாழ்த்தினார். கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நல்ல கல்வி, தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் போய்ச்சேர வேண்டும். சாதியையும், மதத்தையும் சொல்லிச்சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு பணம் பற்றாக்குறை இல்லை. மனம்தான் பற்றாக்குறை. 
 
கட்சிக் கொடியில் இருக்கும் 6 கைகள், 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவிலிருக்கும் நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அதில் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். நீங்கள் இடதா, வலதா  என்று கேட்கிறார்கள். அதற்காககத்தான் பெயரிலேயே மய்யத்தை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி போன்ற பெரிய கட்சிகள் சொன்னதைக் கலந்து எங்கள்  கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்’ என்றார்.
 
'எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று. 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்த கூட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள். இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள்.
 
இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை, நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன அதனை மறக்க மாட்டோம். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். நாங்கள் சமூக சேவகர்களாக வந்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது.
 
கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சாராயத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம். கல்வியை அப்படி விடமுடியுமா? எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்.
 
படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அதை மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
 
சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும். ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.
 
எனக்கு வயது 63; நான் 40 வருட ஆட்சிக்காக வரவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது. ஆனால், மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன்'' என்று கமல் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சிக்கும், கட்சி சின்னத்துக்கும் விளக்கம் அளித்த கமல்!