இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியின் முடிவை பாஜக தலைவர் அமித்ஷா அரசியலாக்கியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நேற்றைய உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையைத் தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி.
இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘பாகிஸ்தான் மீது மற்றுமொரு தாக்குதல் இந்தியாவால் நடத்தப்பட்டுள்ளது. முடிவு ஒன்றுதான். ஒட்டுமொத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்தியர்கள் அனைவரும் இதை தங்கள் வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போட்டியை சமூக ஊடகங்கள் மகாபாரதப் போர் அளவுக்கு மிகைப்படுத்த இப்போது அமித்ஷாவும் இதைத் தாக்குதல் என சொல்லியிருப்பது கண்டனங்களை உருவாக்கியுள்ளது.