இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.
யுவ்ராஜ் சிங்கை ஒரு சர்வதேசக் கிரிக்கெட்டராக உருவாக்கியதில் அவரின் தந்தை யோக்ராஜ் சிங்குக்கும் முக்கியப் பங்குண்டு. யுவ்ராஜ் சிங்கை அவர்தான் பயிற்சிக் கொடுத்து உருவாக்கினார். யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட்டர்தான். அவர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது யோக்ராஜ் சிங் அதிர்ச்சியான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் இந்திய அணிக்காக கபில்தேவ் தலைமையில் விளையாடிய போது எந்த காரணமும் இல்லாமல் அவர் என்னை அணியில் இருந்து நீக்கினார். அதற்காக அவர் மேல் கோபப்பட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவரை சுடுவதற்காக அவரது வீட்டுக்கே சென்றுவிட்டேன்.
ஆனால் அவர் அப்பொது அவருடைய தாயாரோடு இருந்தார். அவரிடம் “நீங்கள் இப்போது உங்கள் பக்திமிக்க தாயோடு இருப்பதால் நான் உங்களை சுடவில்லை” என சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.