இந்திய அணி நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் எதிரணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்று, அரையிறுதியில் ஆல் அவுட் ஆகி வெளியேறியது.
நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அனைத்து லீக் போட்டிகள் மற்றும் காலிறுதிப் போட்டியிலும் எதிரணியை அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிநடை போட்டு வந்தது. ஆனால், நேற்று வியாழக்கிழமை [26-03-15] நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.
விவரம் கீழே:
1. பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் முஹமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியினருக்கு நெருக்கடியை ஏறபடுத்தினார். அதே போல உமேஷ் யாதவ், மொகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
2. பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முஹமது ஷமி, மொஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்தியா அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
4. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.2 ஓவர்களில் 182 ரன்கள் மட்டும் எடுத்தது. முஹமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்தியா 39.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேலும் அடுத்தப் பக்கம்...
5. ஹாமில்டனில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. ஷமி 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிறகு இந்தியா 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இழக்கை எட்டியது.
6. ஈடன் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் முஹமது சமி, உமேஷ் யாதவ், மொஹித் சர்மா மூவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிறகு இந்திய அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மெல்போர்னில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் பேட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
அரையிறுதிப் போட்டி:
சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றாததும் இந்த போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் மட்டும் குவித்தது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எதிரணியினரிடம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்த போட்டியில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.