உலகக்கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணி இந்திய கிரிக்கெட் அணி அல்ல பாரத் கிரிக்கெட் அணி என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல கருத்துகள், எதிர் கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் ஜி20 மாநாடு விருந்து அழைப்பில் பாரதத்தின் குடியரசு தலைவர் என்ற வாசகம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் பாரத் என்ற வார்த்தை புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 2ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் நடந்தபோது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் #BHARvsPAK (Bharat Vs Pakistan) என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தார். தற்போது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “டீம் இந்தியா நஹின் #TeamBharat இந்த உலகக் கோப்பை கோஹ்லி, ரோஹித், பும்ரா, ஜட்டு ஆகியோருக்கு உற்சாகமூட்டும் போது, நம் இதயங்களில் பாரதம் இருக்கட்டும், வீரர்கள் "பாரத்" என்ற ஜெர்சியை அணிந்து கொள்கிறார்கள்” என்று பதிவிட்டு பிசிசிஐ தலைவர் ஜெய்ஷாவையும் டேக் செய்துள்ளார்.
இதனால் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாரத் என்ற பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.