இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களும் எடுத்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்ததால், வெற்றி பெற அவர்களுக்கு 374 ரன்கள் தேவைப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு ஐந்தாம் நாளில் 35 ரன்களே தேவை என்பதாலும் கைவசம் 4 விக்கெட்டுகள் இருப்பதாலும் அதன் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.
ஆனால் நேற்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி வந்தனர். இந்நிலையில் வெற்றிக்கு இன்னும் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி தங்கள் கடைசி விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து பதிவிட்டுள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி “இந்தியாவின் த்ரில் வெற்றிக்கு வாழ்த்துகள். சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அர்ப்பணிப்புதான் இந்த வெற்றியை சாத்தியமாக்கின. அணிக்காக எல்லாவற்றையும் கொடுக்கும் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.