ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சிக்ஸர்களை பார்க்க தன்னை அவுட் ஆக சொல்வதாக சிஎஸ்கே வீரர் ஜடேஜா புலம்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் பரபரப்பான லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே வலிமையான டீமாக இல்லை என பலரும் சொல்லி வந்த நிலையில் தோனியின் அனுபவம் வாய்ந்த கேப்பிடன்சியாலும், மற்ற வீரர்களின் அபார திறமையாலும் அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.
சிஎஸ்கே மேட்ச்சுகளை காண வரும் மஞ்சள் படையினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது தோனியை களத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான். அதுவும் கடைசி ஓவர்களில் இறங்கும் தோனி வின்னிங் ஷாட்டாக பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்து விளாசினால் அன்றையா நாளைக்கு அந்த தரிசனம் போதும் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜாதான். மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஜடேஜா ஒவ்வொரு போட்டியிலும் 12 முதல் 15 ஓவர்களுக்கு பிறகே களம் இறங்குகிறார். கிட்டத்தட்ட மேட்ச் முடிய இருக்கும் நிலையில் அவர் களம் இறங்கினாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தோனி வருகையை நோக்கியே இருக்கிறது.
இதனால் “ஜடேஜா நீங்க சீக்கிரம் அவுட் ஆகி போங்க.. தோனியை வர சொல்லுங்க” என ரசிகர்கள் போர்டு பிடிப்பது ஜடேஜாவை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாம். மேலும் ஒவ்வொரு முறை ஜடேஜா அவுட் ஆகும்போதும் எதிரணி ரசிகர்களை விட சிஎஸ்கே ரசிகர்களே அதை விசிலடித்துக் கொண்டாடுவதை பார்க்கும்போது அவரும் என்ன செய்வார் பாவம்.
இதனால் மனமுடைந்து சக வீரர் தீபக் சஹாரிடம் புலம்பிய ஜடேஜா “தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக விளையாடிக் கொண்டு இருப்பவர்களை ஆவுட் ஆக சொல்லி வேண்டுகிறார்கள். என்ன மாதிரியான சப்போர்ட் இது?” என்று கூறியுள்ளாராம்.