பரபரப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை- பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை மணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது
பின்னர் 125 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் வீரர்கள், இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களை பறி கொடுத்தனர். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பங்களாதேஷ அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் நுவான் துஷான் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கை அணி ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தது. தற்போது வங்காளதேசத்திடம் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது