இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலித்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் துபாயில் வெளியிடப்பட்டது. அதில் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் 372 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 40, 2 ஆவது இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்ததன் மூலம் அவர் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் வெர்னன் பிலாந்தர் 2 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 3 ஆவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இலங்கை வீரர் சங்ககரா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான காலே டெஸ்டில் சங்ககரா 10 ஆவது முறையாக இரட்டைச் சதம் அடித்தததன் மூலம், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் வில்லியர்ஸ்சை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.