ஜிம்பாப்வேக்கெ எதிரான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்ப்பிரிக்கா
ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிப்பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 10-ந்தேதி நடந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. வழக்கம் போல தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்ட்களை இழந்து ரன் குவிக்க முடியாமல் தினறியது. அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்களான ஷான் வில்லியம்ஸ் 41 ரன்களும் விக்கெட் கீப்பர் பிரண்டன் டெய்லர் 29 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நெகிடி, பீட்டர்சென், பிலைலிங்க் தலா 2 விக்கெட்களையும் ஷம்சி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அடுத்து 133 ரன்கள் என்ற சுலபமான இலக்கோடு களமிறங்கிய தெ ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்து வெற்றியடைந்தது. அதிகபட்சமாக டுமினி 33 ரன்களும் டீ காக் 26 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தனர். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக ஷான் வில்லியம்ஸ் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பீட்டர்சென் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா இருபது போட்டித் தொடரையும் கைப்பற்றியுள்ளது.