நாளை சிட்னியில் 3வது டெஸ்ட்: பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த தொடரை வெல்வது யார் என்பதை முடிவு செய்யும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது
இந்த நிலையில் ஒருநாள், டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென சிட்னியில் நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
சிட்னியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதே இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம் என்பது குறிப்பிடதக்கது. சிட்னி மைதானத்தில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஒவ்வொரு பார்வையாளரும் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே மைதானத்திற்குள் நுழைய வேண்டும், போட்டி நடைபெறும் முழு நாட்களிலும் மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இம்முறை பார்வையாளர்கள் மைதானத்துக்கு அதிகளவில் வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது