இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இடம் இந்தியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 240 என்ற மிக எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ரோஹித் ஷர்மா அமைத்துக் கொடுத்தும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொத்ப்பியதால் இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. முதல் 10 ஒவர்கள் மட்டும் சிறப்பாக ஆடி பயனில்லை. தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும். நாம் விளையாடும் பிட்ச்சுக்கு ஏற்றவாறு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
நான் ரன்கள் சேர்த்ததற்கு என்னுடைய பேட்டிங் அனுகுமுறைதான் காரணம். அதில் கொஞ்சம் ரிஸ்க்கும் இருக்கிறது. நான் மட்டும் நன்றாக பேட்டிங் செய்து இந்திய அணி தோற்றால் அது ஏமாற்றம்தான். அதற்காக என்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டேன். இந்த பிட்ச்சில் மிடில் ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது எளிதல்ல. அதனால் பவர்ப்ளே ஓவர்களில் எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்க வேண்டும். மிடில் ஆர்டரில் சொதப்பியது குறித்து ஆலோசிப்போம்” எனக் கூறியுள்ளார்.