வங்காளதேச அணிக்கு எதிரான நேற்று நடந்த டி20 போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தை மாற்றினார் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த முத்தரப்பு டி20 போட்டியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவெடுத்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோஹித்சர்மா மற்றும் ரெய்னா அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. ரோஹித் 89 ரன்களும், ரெய்னா 47 ரன்களும் எடுத்தனர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் ரஹிம் அதிரடியாக விளையாடினாலும் அவருக்கு கைகொடுக்க பேட்ஸ்மேன் இல்லாததால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியபோது, எங்கள் அணி பேட்டிங் விளையாடி முடித்த பிறகு 10-15 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம் என்று நினைத்தேன், ஆனால், பவுலர்கள் கடைசி ஒவர்களில் சிறப்பாக பந்து வீசினர். வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பவுலிங்கால் ஆட்டம் எங்கள் அணி பக்கம் மாறியது. எங்களின் பவுலிங் குழு திட்டம் வகுத்தது போலவே சிறப்பாக செயல்பட்டது. எனக்கும் ரெய்னாவுக்கும் பேட்டிங் பார்டனர்ஷிப் சிறப்பாக அமைந்தது வெற்றிக்கு ஒரு பெரும் பங்காக இருந்தது என தெரிவித்தார்.