நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின்போது சக வீரரை ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழில் திட்டியது வீடியோவில் பதிவான சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இருவரும் தமிழில் பேசிக் கொள்வது வழக்கம்.
சில தினங்கள் முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி சேஸிங் செய்துக் கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச வரும்போது பீல்டிங் செட் செய்தார். அப்போது சக வீரரான ஷிம்ரன் ஹெட்மயரை ஃபீல்டிங் மாற்ற விக்கெட் கீப்பராக நின்ற சஞ்சு சாம்சனிடம் சொன்னபோது “அந்த சனியன அங்க போய் நிக்க சொல்லு” என்று சொல்ல, சஞ்சுவும் “டேய்.. தள்ளி நில்றா” என சொன்னார்.
இது மேட்ச் வீடியோவில் பதிவான நிலையில் அதை பார்த்த பலரும் அஸ்வினும், சஞ்சுவும் மற்றவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர்களை சனியன் என்று மோசமான வார்த்தைகளில் பேசுவது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் அணி ரசிகர்கள் வேறு விதமாக பேசிக் கொள்கிறார்கள். ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின், ஹெட்மயர் மூவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்குள் ஒருமையில் பேசிக் கொள்வதும், கிண்டல் செய்து கொள்வதும் சகஜம். அப்படியான உரிமையில்தான் ஹெட்மயரை அஸ்வின் விளையாட்டாக அவ்வாறு கூறினார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் அடிக்கடி ரீல்ஸ் செய்தும் வெளியிட்டு வருவார்கள். நண்பர்களுக்குள் இது சகஜம்தான் என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலர்.