மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா சதமடித்து அபாரம்.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக 19 வயதான பிருத்வி ஷா அணிக்குள் சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுக்க லோகேஷ் ராகுலோடு பிருத்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். முதல் ஓவரிலேயே ராகுல் அவுட் ஆகி அதிர்ச்சிக் கொடுக்க அடுத்து வந்த புஜாராவோடு இணைந்து அதிரடி காட்டினார் பிருத்வி ஷா.
சிறப்பாக விளையாடிய அவர் 99 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 15 வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
குறைந்த வயதில் அறிமுகப் போட்டியில் சர்வதேச வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சர்வதேசப் போட்டிகள் மட்டுமல்லாது உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை மற்றும் துலிப் கோப்பைத் தொடர்களிலும் தான் அறிமுகமானப் போட்டிகளில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.