பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு வான்கடே மைதானத்தில் சிலை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர் மகேந்திரசிங் தோனி. 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அணியின் கேப்டனாக செயல்பட்டதோடு, சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற செய்தவர் தோனி. தோனிக்கு இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளை காட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் அவரை செல்லமாக தல தோனி என்று அழைப்பதே வழக்கம்.
தற்போது அனைத்து வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் ரசிகர்களால் தொடர்ந்து சிஎஸ்கே அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் தோனி. கடந்த 2011ம் ஆண்டில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் இறுதி பந்தில் தோனி அடித்த சிக்ஸர் இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது.
அந்த சிக்ஸர் போஸை சிலையாக மும்பை வான்கடே மைதானத்தில் அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சிலையை தோனி கையாலேயே திறக்க வைக்க முடிவு செய்து தோனியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாம். தோனிக்கு சிலை அமைக்க உள்ள இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.