கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை அவர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய உணவுப் பழக்கம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “2015 ஆம் ஆண்டு முதல் நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறேன். காலை மற்றும் மதிய உணவு நான் எடுத்துக் கொள்வதில்லை. இது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் நாம் இதற்குப் பழக்கமாகி விட்டோம் என்றால் அது எளிமைதான். நான் இனிப்புப் போன்ற பலவகை உணவுகளில் இருந்து விலகி இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.