இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் இந்திய துணைக்கண்டத்தில் சிறப்பாக விளையாடும் நமது அணி வெளிநாடு சுற்றுப்பயணங்களில் சரியாக விளையாடுவதில்லை.
குறிப்பாக தென்னாப்பிரிக்கா போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சுகளில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறியே வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ரஹானே களமிறக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஹானே வெளிநாட்டு பிட்சுகளில் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை ஏற்கனவே இந்திய அணிக்கு அளித்திருக்கிறார். ஆனால் அவரை வெளியே வைத்துவிட்டு, ரோஹித் ஷர்மாவை களமிறக்கியது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, செய்தியாளரின் கேள்வியால் கோபமடைந்து காட்டமாக பதிலளித்துள்ளார். சிறந்த 11 வீரர்களுடன் களமிறங்கியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியுமா என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த கோலி யார் சிறந்த 11 வீரர்கள்? என திருப்பி கேட்டார். ஒருவேளை நாங்கள் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தால் இது சிறந்த 11 பேரை கொண்ட அணியாக இருந்திருக்குமா?. ரிசல்ட்டுகளை வைத்து நாங்கள் அணியை தீர்மானிப்பதில்லை. நீங்கள் சிறந்த 11 வீரர்களுடன் களமிறங்கியிருக்கலாம் என கூறுகிறீர்கள், அப்படியானால், நீங்களே அந்த 11 வீரர்கள் யார் என கூறிவிடுங்கள் என கோபமாக பதில் அளித்தார் அவர்.