ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் சேர்த்தது. அந்த அணி தொடக்கத்தை வெகு சிறப்பாக தொடங்கிய போது அடுத்தடுத்த விக்கெட்களை இழந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.
இதையடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தொடக்கத்தில் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கே எல் ராகுல் தனியாளாக அதிரடிக் காட்டி பெங்களூர் அணியிடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறித்தார். அவர் 53 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் “இது என் மைதானம். இது எனது சொந்த ஊர். இந்த மைதானத்தை என்னை விட யாரும் பெரிதாக அறிந்திருக்க மாட்டார்கள். நான் இங்கு விளையாடுவதை விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த கே எல் ராகுலை இந்த முறை ஆர் சி பி அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.