நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ், சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கமின்ஸிடம் மும்பை அணி டாஸ் மோசடி செய்ததாக செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இதில் சன்ரைசர்ஸ் அணி 287 என்ற இமாலய இலக்கை செட் செய்த நிலையில் ஆர்சிபி 262 ரன்களில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டபோது முன்னர் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து டூ ப்ளெசிஸ் செய்து காட்டியது வைரலாகியுள்ளது. கடந்த 11ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் இடையே போட்டி நடந்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் போட்டார்.
அவர் ஒரு மார்க்கமாக டாஸை பின்னால் போட அதை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மும்பைக்கு சாதகமாக டாஸ் வரும்படி டாஸ் காயினை திருப்பி எடுத்ததாக கூறப்படுகிறது. இதை நேற்றைய போட்டியின்போது டாஸ் போடும் ஏரியாவில் ஆர்சிபி கேப்டன் டூ ப்ளெசிஸ், சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸிடம் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே மும்பை – ஆர்சிபி போட்டியின்போது அம்பயர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக ரிவ்யூ தொடர்பான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி டாஸ் காட்சியை எடுத்து நேற்றைய டாஸ் போட்ட வீடியோவுடன் இணைத்து வெளியிட்டதோடு மும்பை அணி இதுபோன்ற மோசமான செயல்களை செய்து வெளிநாட்டு ப்ளேயர்கள் நடுவே இந்தியாவின் பெயரை கெடுப்பதாக வருத்தமும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் வேறு சிலர் அந்த வீடியோவின் க்ளோஸ் அப் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஸ்ரீநாத் காயினை திருப்பவில்லை என்று ஸூம் செய்து தெளிவாக காட்டியுள்ளனர். சிலர் மும்பை அணி மீதான வெறுப்பில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த டாஸ் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களை வைரலாக்கியுள்ளது.