மீண்டும் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பியுள்ள நிலையில் அந்த அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி உள்ளது. ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யாவின் திடீர் வரவால் அந்த அணியின் வீரர் ஜாஸ்ப்ரீத் பும்ரா அதிருப்தி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின்தொடர்வதையும் பும்ரா நிறுத்திவிட்டார். இதனால் மும்பை அணி பும்ராவை கைவிட போவதாக கூறப்படுவதால் மும்பை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தனக்குதான் வரும் பும்ரா நினைத்திருந்ததாகவும், இப்போது பாண்ட்யா வரவால் அவரிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அவர் அணி நிர்வாகத்தின் பேரில் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் மும்பை அணியை விட்டு வெளியேற முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.