உலகக் கோப்பை தொடரின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே இந்த தொடரில் தோல்வியே காணாமல் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன.
இரு அணிகளுமே சமபலத்தில் உள்ளதால் இந்த போட்டியை வெல்வதற்கான வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்குமே சமமாக உள்ளது. இந்நிலையில் இந்த கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பது 140 கோடி இந்தியர்களின் கனவாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவேயில்லை.
அதுமட்டுமில்லாமல் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடுகிறார். அவரை வெற்றியோடு வழியனுப்ப வேண்டும் என்பது வீரர்களின் குறிக்கோளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் டிராவிட் கேப்டனாக செயல்பட்ட 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடியது. அந்த தொடர் வெஸ்ட் இண்டீஸில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக அவர் இழந்ததை பயிற்சியாளராக அதே நாட்டில் பெற வேண்டும் என்பதும் ரசிகர்களின் ஆசையாக உள்ளது.