இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் டொமினிக்கா தீவுகளில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணியின் சுழல்பந்து கூட்டணியான அஸ்வின் மற்றும் ஜடேஜா பதம் பார்த்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் வருவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பாக அஸ்வின் 5 விக்கெட்களும், ஜடேஜா 3 விக்கெட்களும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 421 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அபார சதத்தை அடித்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை கொண்டு வர அடித்தளமிட்டனர். தனது முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 171 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்கள் பின்னிலையில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை போலவே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸ் போலவே சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 171 ரன்கள் சேர்த்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.