மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல்நாள் முடிவில், விராட் கோலியின் அசத்தல் சதத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 7 ரன்களிலும், இவரையடுத்து புஜாரா 16 ரன்களிலும் வெளியேறினர்.
பின்னர், மற்றோரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். பின்னர், 84 ரன்கள் [9 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] குவித்த ஷிகர் தவான், தேவேந்திர பிஷ்ஷூ பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதற்கிடையில், விராட் கோலி 75 பந்தில் அரைச்சதம் கண்டார். அடுத்து வந்த ரஹானே 22 ரன்களில் வெளியேறினார். பின்னர், ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். அபாரமாக ஆடிய விராட் கோலி 134 பந்துகளில் [11 பவுண்டரிகள்] சதம் அடித்து அசத்தினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 143 ரன்களுடனும், அஸ்வின் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் தேவேந்திர பிஷ்ஷூ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.