இந்தியா – இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் அறிமுக வீரரான ஆகாஷ் தீப் ஆரம்பமே விக்கெட்டுகளை தட்டித் தூக்கி வருகிறார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றி உறுதியாகி விடும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 4வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த போட்டிகளில் விக்கெட்டுகளை கொள்முதல் செய்த ஜாஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இளம் பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட்டில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை துடைத்தெறிந்து ஆரம்பத்திலேயே விக்கெட் வேட்டையை தொடங்கியுள்ளார் ஆகாஷ் தீப். 9வது ஓவரில் பந்து வீசிய ஆகாஷ் தீப் தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட்டையும், ஓலி போப்பையும் ஒரே ஓவரில் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து 11வது ஓவரில் அரை சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ஜேக் க்ராவ்லியின் விக்கெட்டையும் சரித்தார்.
அறிமுகமான முதல் போட்டியிலேயே அசால்ட்டாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.