Publish Date: Mon, 28 Jul 2025 (14:16 IST)
Updated Date: Mon, 28 Jul 2025 (14:24 IST)
மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பான தடுப்பாட்டத்தை ஆடி போட்டியை டிரா செய்தனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துணைக் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். அதன் பின்னர் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார். ஆனால் அதன் பிறகு அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதையடுத்து அவர் அடுத்து நடக்கவுள்ள ஐந்தாவது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் நாராயணன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் “டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவே இதுபோன்ற புறக் காரணிகளால் காயமடைந்து வெளியேறும் வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்படும் வீரரை பிளேயிங் லெவனில் இடம்பெற செய்யும் படி திருத்தம் கொண்டுவரவேண்டும். முக்கியமான போட்டியில் 11 பேர் கொண்ட அணிக்கெதிராக 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.