ஐபிஎல் -2024 சீசனின் முதல் லீக் போட்டி நேற்று சென்னையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.
அந்த அணியின் முதல் 5 விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்து அந்த அணி 78 ரன்களுக்கு தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் நிதானமாக விளையாடியும், இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியும் அணியை 173 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் பேட் செய்ய வந்த சி எஸ் கே அணியில் அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து எளிதாக இலக்கை எட்டியது.
இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் டூ பிளசிஸ் “நாங்கள் இந்த போட்டியில் 20 ரன்கள் குறைவாக சேர்த்துவிட்டோம். பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்களை இழந்து முதல் 10 ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. எங்களை விட எல்லாவிதத்திலும் சி எஸ் கே அணி முன்னிலையில் இருந்தனர். நாங்கள் முதலில் பேட் செய்தது தவறில்லை. ஆடுகளம் காய்ந்து போய் இருந்தது. சென்னையில் முதலில் பேட் செய்யும் அணிகள்தான் அதிக முறை வென்றுள்ளன.” எனக் கூறியுள்ளார்.