பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இன்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி பவர்ப்ளேவிலேயே சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த தவறியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசன் 67 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் 287 என்ற புதிய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை சன்ரைசர்ஸ் படைத்தது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சேஸிங்கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய சூழல். அதற்கேற்ப சன்ரைசர்ஸ் அணியும் அதிரடி காட்டியது. பவர்ப்ளே முடியும்போது 80 ரன்களை ஆர்சிபி நெருங்கியிருந்தபோது விராட்கோலி 42 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் டூ ப்ளெசிஸ் நின்று விளையாடி 28 பந்துகளுக்கு 62 ரன்கள் வரை வந்தவர் அதிர்ச்சிகரமாக விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து வந்த வில் ஜேக்ஸ், பட்டிதார், சவுரவ் யாரும் இவ்வளவு பெரிய இமாலய இலக்குக்கு சரியான ஆட்டத்தை தரவில்லை. சவுரவ் சவுகான் முதல் பாலிலேயே டக் அவுட் ஆனார்
ஆனால் தினேஷ் கார்த்திக் 5 விக்கெட்டுகளுக்கு பிறகு இறங்கினாலும் ஒட்டுமொத்த மேட்ச்சை ஒற்றை ஆளாக தாங்கினார். 35 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என அடித்து 83 ரன்கள் வரை வந்தார். தொடர்ந்து நின்றிருந்தால் மேலும் சில சிக்ஸர்களை வீழ்த்தி அணியை வெற்றி பெற செய்தாலும் செய்திருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக 18.5வது ஓவரில் அவுட் ஆனார்.
அதன்பின்னரும் நின்று விளையாடிய அனுஜ் ராவத் சில பவுண்டரிகளை கடைசி ஓவரில் விளாசினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும் தினேஷ் கார்த்திக்கின் அட்டகாசமான ஆட்டம் ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோராக ஆர்சிபி முன்னர் அடித்த 263 ரன்கள்தான் இருந்தது. அதை தற்போது கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் முறியடித்திருந்தாலும், தனது முந்தைய இலக்குக்கு நிகரான 262 ரன்களை அடித்துள்ளது ஆர்சிபி. சேஸிங்கில் அதிகமாக அடிக்கப்பட்ட ரன்களில் இது அதிகபட்ச ரெக்கார்ட் ஆகும்.