நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் சி எஸ் கே மற்றும் கே கே ஆர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் கே கே ஆர் அணி முதலில் ஆடி 179 ரன்கள் சேர்க்க, அடுத்து ஆடிய சி எஸ் கே அணி 20 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சி எஸ் கே அணியின் மூன்றாவது வெற்றி இதுதான்.
இந்த போட்டியில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 100 முறை நாட் அவுட்டாக இருந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி.
உலகக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகக் கருதப்படும் தோனியின் தனிச்சிறப்புகளில் ஒன்று கடைசி வரை தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை வெற்றிகரமாக எடுத்துச் சென்று முடிப்பது. ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட தன்னுடைய 40 சதவீதம் போட்டிகளில் அவர் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.