இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக இருப்பவர் டேவிட் வார்னர். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் டேவிட் வார்னர். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் 500க்கு குறையாமல் ரன்களை குவிக்கும் டேவிட் வார்னர் கடந்த சில சீசன்களில் சரியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டேவிட் வார்னரை முன்னதாக கேப்டன் பதவியிலிருந்து தூக்கிய சன்ரைசர்ஸ் அணி பின்னர் ப்ளேயிங் 11 வீரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கி சேரில் அமர வைத்தது.
ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தொடங்கியபோது டேவிட் வார்னரை சன்ரைஸர்ஸ் விடுவித்த நிலையில் அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். ஆனால் தற்போது கார் விபத்தில் சிக்கிய பண்ட் ஓய்வில் இருப்பதால் டெல்லி அணி கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் டேவிட் வார்னரை அணியின் கேப்டனாக டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது டேவிட் வார்னர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, டேவிட் வார்னர் மீண்டும் தனது பழைய ஃபார்மிற்கு வந்து கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.