ஐபிஎல் மினி ஏலம் சில தினங்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. இதில் மிட்செல்லை யாரும் எதிர் பார்க்காத வகையில் 14 கோடிக்கு எடுத்து ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ள மிட்செல் “நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட போது என் மகளின் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அவளுக்கு நான் இவ்வளவு மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளேன் என தெரியாது. ஆனால் இந்த தொகை என் குடும்பத்துக்கு பல வழிகளில் உதவும். என் மகள்கள் வளர்ந்ததும் பல வசதிகளை அனுபவிக்க இந்த தொகை உதவும். சென்னை அணிக்காக விளையாடுவதை மிகவும் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.