இந்தியாவில் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிய்யுள்ள அறிவிப்பில்,
''13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து வங்காளதேசம் அணிகள் விளையாடவுள்ள போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி,போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விடவும் கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என்பதனையும் மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.
நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவை: நிலவழித்தடம்: பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்:புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 35 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளன்று (13.10.2023) இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நில வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது. உலக கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தினை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.