Publish Date: Wed, 04 Sep 2024 (08:02 IST)
Updated Date: Wed, 04 Sep 2024 (08:05 IST)
தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.
இவர் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட அழைக்கப்படுவதில்லை. ஆனால் இளம் வீரர்களுக்கு தன்னுடைய யுடியூப் சேனலின் மூலமாக பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதுபோல பல மூத்த வீரர்களை நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை வெளிக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியில் தோனி தலைமையில் அறிமுகமான அஸ்வின், அவரது கேப்டன்சியின் சிறப்பியல்புகளைப் பற்றி பேசியுள்ளார். அதில் “தோனி கேப்டன்சியின் சிறப்பு என்னவென்றால் அவர் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவார் என்பது. ஒரு திறமையான வீரரைக் கண்டுபிடித்து விட்டால் அவரை அதிக போட்டிகளில் விளையாட வைப்பார். ஜடேஜாவை அவர் பினிஷர் ரோலுக்காக அதிக போட்டிகளை விளையாட வைத்தார். அதனால் அவர் அதிக பலனடைந்தார்” எனக் கூறியுள்ளார்.