Publish Date: Fri, 19 Apr 2024 (13:17 IST)
Updated Date: Fri, 19 Apr 2024 (13:29 IST)
நேற்று நடந்த மும்ப மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய அணி ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 192 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி சார்பாக ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் பின்னர் பஞ்சாப் அணி பேட் செய்ய வரும் போது ஆரம்பத்திலெயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே 6 விக்கெட்களை இழந்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி இலக்கை நெருங்கினர். ஆனால் இருவரும் முக்கியமானக் கட்டத்தில் தங்கள் விக்கெட்களை இழந்ததால் பஞ்சாப் அணியால் 182 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது. 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்துக் கலக்கிய அஷுடோஷ் பும்ரா பந்தில் ஸ்வீப் ஷாட்டில் ஒரு சிக்ஸர் அடித்தார். அதுபற்றி பின்னர் பேசிய அவர் “வேகப்பந்துவீச்சாளர்களின் ஓவரில் ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் அடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை. உலகின் சிறந்த பவுலரான பும்ராவின் ஓவரில் அப்படி அடித்தது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாகும்” எனக் கூறியுள்ளார்.