லோதா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தாததால், இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் (பிசிசிஐ) பதவியிலிருந்து அனுராக் தாகூர் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை சீரமைக்க, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இக்குழு 2016-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தில் அளித்தது. பிசிசிஐ-யில் அங்கம் வகிக்கும் மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்குரிமை மட்டுமே வழங்கப்பட வேண்டும்; 70 வயதுக்கு மேற்பட்டோர் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பதவி வகிக்கக் கூடாது.
தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது; அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், குற்ற தண்டனை பெற்றவர்கள், 9 வருடங்களுக்கு மேலாகவும் பதவியில் இருப்பவர்கள் ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் எந்த ஒரு பதவியிலும் இருக்கக் கூடாது என்பவை உள்ளிட்டவற்றை லோதா குழுவின் பரிந்துரைத்தது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், லோதா குழுவின் பரிந்துரைகளை பிசிசிஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
லோதா பரிந்துரைகளை ஏற்க மறுப்பதாக பிசிசிஐ கூறிய நிலையில், அப்படி ஏற்க மறுக்கும் கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ ஏன் நிதி வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒருகட்டத்தில் உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்றும் தடை விதித்தது.
மேலும், நாட்டின் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நியமிக்கும் தணிக்கையாளர் ஒருவரிடம் கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் வரவு - செலவுக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
ஆனால், இவை எவற்றையும் கண்டுகொள்ளாத பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்குத் தடையை உண்டாக்கும் வேலைகளில் இறங்கினார்.
இந்நிலையில், லோதா பரிந்துரைகள் தொடர்பான வழக்கு, திங்களன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோதா பரிந்துரைகளை அமல்படுத்த இடையூறாக இருந்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி விலகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.