இந்திய கிரிக்கெட் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக இப்போது ஈஸ்ட் ஸோனின் தலைவர் ஷிவ சுந்தர் தாஸ் இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அப்போதைய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.
அது பிசிசிஐ வட்டாரத்தில் புயலைக் கிளப்பியதால் அவர் பின்னர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இதனால் இப்போது இடைக்கால குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்த குழு கலைக்கப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பதவிக்கு சேவாக் விண்ணப்பிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் குறைவான சம்பளம் காரணமாக அவர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் பவுலர் அஜித் அகார்கர் இந்த தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும், அவரே தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.