இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நடந்த முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்க்க, அதன் பின்னர் ஆடிய இந்திய அணியும் இலக்கை நெருங்கியது. அந்த ஓவரின் கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற போது ரோஹித் ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்தார். அப்போது தன்னால் துரிதமாக ஓட முடியாது என்பதால் ரிட்டையர் ஹர்ட் ஆகி ரிங்கு சிங்கை இறங்க வைத்தார்.
ஆனால் அதன் பின்னர் நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். விதிப்படி அவரை நடுவர்கள் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட் செய்ய விட்டிருக்கக் கூடாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதை இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவும் ஒத்துக் கொண்டுள்ளார். அவர் “ரோஹித் ஷர்மா ரிட்டையர் ஹர்ட் ஆன பின்னர் மீண்டும் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட் செய்ய அவரை நடுவர்கள் அனுமதித்திருக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.