கிரிக்கெட் செய்தி: பி.சி.சி.ஐ.-யை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர மசோதா?
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (18:24 IST)
மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றவுள்ள தேசிய விளையாட்டு மசோதாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளையும் கொண்டு வர முடிவெடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ. இந்த மசோதா பி.சி.சி.ஐ.,யை கட்டுப்படுத்தவே நிறைவேற்றப்பட உள்ளதாக குற்றம்சாட்டியது. இந்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு பி.சி.சி.ஐ., சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் வந்தாகவேண்டும். இந்த மசோதாவில், விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவியில் உள்ளவர்களுக்கு வயது 70க்குமேல் இருக்கக்கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு மேல் வகிக்கக்கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐ.சி.சி., தலைவராக உள்ள சரத்பவார் மத்திய விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார்.மேலும் இந்த மசோதாவில், பி.சி.சி.ஐ., வந்தால், இந்திய கிரிக்கெட் அணியும், மற்ற விளையாட்டு வீரர்களை போல் போதை தடுப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். இந்திய அணி வீரர்கள் சர்வதேச போதை மருந்து தடுப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த மசோதா குறித்து பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், விளையாட்டுத்துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதனை தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை முடிந்து விட்டது. இந்த மசோதா நாளை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இந்தியாவில் ஏறக்குறைய 40 விளையாட்டு அமைப்புகள் உள்ளன. இந்திய ஹாக்கி பெடரேஷன், ஹாக்கி இந்தியா, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கம், பி.சி.சி.ஐ., போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் பி.சி.சி.ஐ., தன்னாட்சி பெற்ற அமைப்பாக விளங்குகின்றது. ஆனால் ஐ.பி.எல்., போட்டிகள் தொடர்பாக வெளிநாட்டு பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பி.சி.சி.ஐ.,க்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சலுகை காட்டுவதாக நாடாளுமன்றக் குழுவும் கருத்து தெரிவித்திருந்தது. காமன்வெல்த் போட்டிகளின் முறைகேடு நடந்ததை தொடர்ந்து கல்மாடி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனை தொடர்ந்து விளையாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த மசோதா மூலம் கிரிக்கெட் வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் வயது மற்றும் போதை மருந்து தடுப்பு சோதனைக்கு உட்பட வேண்டும் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.பி.சி.சி.ஐ.யை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்ற மத்திய அரசின் சட்டத்திற்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், இந்த மசோதாவை இன்னும் பார்க்கவில்லை. அரசிடமிருந்து எந்தவித உதவியும் பெறாத போது எவ்வாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம்என கூறினார். மேலும் அவர், அரசிடம் உதவி பெறும் அமைப்புகள் மட்டுமே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வர வேண்டும். பி.சி.சி.ஐ.,அல்ல என கூறினார்.இந்த மசோதாவில் பி.சி.சி.ஐ.-யை சேர்ப்பது குறித்து கபில்தேவ் கருத்துக் கூறுகையில், "மத்திய அரசின் சட்டத்தை புறக்கணிப்பது என பி.சி.சி.ஐ., சிந்தனை செய்யக்கூடாது. அரசு சட்டதிட்டங்களை வகுத்தால் அதனை பி.சி.சி.ஐ., பின்பற்ற வேண்டும். பி.சி.சி.ஐ. சுதந்திரமாக செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது ஆனால் அது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என கூறினார். முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய எம்.பி.யுமான மொகமட் அசாரூதின், சட்டத்திலிருந்து பி.சி.சி.ஐ.,க்கு விலக்கு அளிக்கக்கூடாது. இந்த சட்டம் விளையாட்டு அமைப்புகளுக்கு நல்லது. இந்த சட்டம் அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் யாருக்கும் விலக்கு அளிக்கக்கூடாது என கூறினார்.