கிறிஸ்துமஸ் விற்பனை மந்தமானதைத் தொடர்ந்து அமெரிக்க விற்பனையாளர்கள் இன்று கறுப்பு வெள்ளிக்கிழமையாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்களால் டிசம்பர்-25 ம் தேதி ஏசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் வருகையையொட்டி அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவர்கள் நன்றி தெரிவிக்கும் விழாவை நேற்று முன்தினம் கொண்டாடினார்கள்.
இந்த நன்றி விழாவைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஆயத்த காலம் தொடங்குகிறது. அதேபோன்று இவ்விழாவுக்குத் தேவையான உடைகள், கிறிஸ்மஸ் மரம், அலங்காரப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை அமெரிக்கர்கள் வழக்கமாக முதல் நாள் முதலே வாங்கத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் வீட்டுச் சந்தையையும் அசைத்து பார்த்துள்ளது. கடன் சிக்கல், டாலர் மதிப்பு குறைந்து வருவது, பங்குச் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகிய பிரச்சனைகளால் அமெரிக்காவின் சில்லரை வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது. இது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிக அளவு பொருட்கள் வாங்காததின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனால் வெறுத்துப் போன கடைக்காரர்களும், வர்த்தகர்களும் இன்று கறுப்பு வெள்ளிக்கிழமையாக கடைபிடிப்பது என முடிவு செய்துள்ளனர்.இதேநிலை நீடித்தால் அமெரிக்கர்களுக்கு விடுமுறைக் காலம் கொடுமையானதாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர் ஐயன் செப்பர்ட்சன் கூறினார்.
அமெரிக்காவில் தற்போது நிலவும் பொருளாதார நிலை பொருட்கள் வாங்கிக் குவிக்கும் அமெரிக்கர்களின் விருப்பத்தை குறைத்துவிட்டதா அல்லது வாங்கும் சக்தியை குறைத்துவிட்டதா என்பதை சில்லறை வணிகத்துறை வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
எரிபொருள் விலை உயர்வு பங்கு வர்த்தகத்தின் நிலையற்ற தன்மை வாடிக்கையாளர்களை அதிகமாக பாதித்துள்ளது. இதேநிலை நீடிக்குமானால் அடுத்து குடும்பங்களின் அன்றாட சூழ்நிலை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.