2013 செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 7 மணிக்கு சேந்தமரம் பங்கின் கிளை பங்கான தன்னூத்து கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடந்த அதிசயம் தான் இந்த பதிவு.
சேர்ந்தமரம் பங்கின் மற்றொரு கிளைக்கிராமம் தன்னூத்தில் 2013 செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற்ற அதிசய மின்னல் மாதா காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
2012 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித அருளானந்தர் ஆலயத்துடன் இணைந்த 73 அடி உயரமான கோபுரத்தில் இயேசுவின் திருஇருதய சுரூபம் 43 அடி உயரத்திலும் அன்னை கன்னிமரியாளின் சுரூபம் 33 அடி உயரத்திலும் தூயமிக்கேல் அதிதூதர் சுரூபம் 23 அடி உயரத்திலுமாக மிக உறுதியாக சிமெண்ட் தளத்தில் பொருத்தபட்டிருந்தன.
தன்னூத்து கிராம மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த நாள் தான் 01-09-2013. அந்த நாளில் இடி, மின்னல், மழை. சூறாவளி காற்று போன்ற இயற்கை சீற்றத்துடன் மின்சாரத்தடையும் இணைந்து கிராமத்தையே இருள் சூழ்ந்தது.
இதனால் மக்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். இந்த வேளையில்தான் இடி, மின்னல் வெளிச்சத்தில் வெள்ளை நிறத்தில் அதிசயமாக ஒளிரும் தீப்பிழம்பாக காட்சியளித்த அன்னையின் சுரூபம் சிரித்த முகத்துடன் கோபுரத்தின் மூன்றாவது அடுக்கு தளத்திலிருந்து கீழே இறங்கி வந்த அற்புதம் நடந்தது.
மின்னல் மாதாவின் இந்த அற்புதக் காட்சியை தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (43) , நவமணி அரசு (50) , ராம் கபிலன் (32), மரிய செல்வம் (65), லாரன்ஸ் (55), பவளக்கொடி (70) மற்றும் தெற்கு பரன்குன்றாபுரத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்ற ஆறுமுகச்சாமி (40) ஆகிய ஏழு நபர்கள் வெவ்வேறு வகையில் இக்காட்சியை கண்டதாகச் சாட்சி அளிக்கின்றனர்.
கோபுரத்தின் தடுப்பு சுவர், ஆலயத்தின் பக்கவாட்டிலுள்ள சிலாப்புகள், தரையில் கிடந்த கற்குவியல்கள் என எதன் மீதும் மோதாமல் 33 அடி உயரத்திலிருந்து கீழே இறங்கி வந்து மாதாவின் சுரூபம் எவ்வித கீறலும் சீராய்ப்பும், உடைச்சலும் ஏற்படாமல் பத்திரமாக இருப்பதும் முன்பு கோபுரத்தில் இருந்த அதே திசை நோக்கியே மாதா சுரூபம் தரையிரங்கி நிற்பதும் மாபெரும் அதிசயம்.
73 அடி உயர கோபுர உச்சியிலிருந்த சிலுவையில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கின் கண்ணாடி கீழே விழுந்தும் நொறுங்கிவிடாமல் பாதுகாப்பாக அன்னையின் சுரூபத்திற்கு அருகில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.