விவிலிய நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதன்படி இயேசு, "மனிதரது பாவங்களை தீர்க்க பலியானாவர்", விண்ணரசின் நற்செய்தியை அறிவிக்க வந்தவர் ஆவார் (மாற்கு 10:45, லூக்கா 4:43, யோவான் 20:31).
மேலும் விவிலியத்தில் இயேசு தனது போதனைகளின் போது பல புதுமைகளை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவை நோய்களை குணமாக்குதல், நீரின் மேல் நடத்தல், நீரை திராட்சை இரசமாக்குதல், சிலரை மரணத்திலிருந்து எழுப்புதல் (யோவான் 11:1-44). போன்றவையாகும்.
இயேசுவின் பகிரங்க வாழ்வின் போது மூன்று பாஸ்கா பண்டிகைகளை யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பகிரங்க வாழ்கை மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது.
இயேசு பொது மக்களுக்கு போதித்தார் எனினும் தனது பிரதான போதனைகளை அப்போஸ்தலர் என அழைக்கப்பட்ட தனது நெருங்கிய பன்னிரு சீடருக்கு மட்டுப்படுத்தினார். இயேசுவின் போதனைகளின் உச்சக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தார்.
இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இஸ்ரேல்) மற்றும் பெறாயா (இன்றைய மேற்கு ஜோர்தான்) என்பனவாகும்.
மலைப் பிரசங்கம் (மத்தேயு 5-7) இயேசுவின் போதனைகளில் முக்கியமானதாகும். இதில் பல ஆசீர்வாதங்களும் கிறிஸ்து கற்பித்த செபமும் காணப்படுகிறது. மலைப்பிரசங்கத்தில் இயேசு கோபம், பெருமை, விவாகரத்து, சத்தியங்கள், பழிவாங்குதல் என்பவை குறித்து போதித்தார். இயேசுவின் போதனைகளில் சில மரபு வழியானவையாகும். மேலும் சில மரபுகளைப் புறக்கணித்தவையாகும்.
இயேசு மோசேயின் சட்டங்களை பின்பற்றும்படி கூறினார். அதேவேளை ஒருகன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையுன் காட்டு போன்ற மோசேயின் சட்டத்துக்கு புறம்பான விஷயங்களையும் போதித்தார்.
இயேசு மக்களுக்கு போதிக்கும் போது, ஊதாரி மைந்தன் உவமை (லூக்கா 15:11-32), விதைப்பவன் உவமை (மத்தேயு 13:1-9) போன்ற உவமைகளைப் பரவலாகப் பயன்படுத்தினார். அவரது போதனைகள் விண்ணரசு, மனிதநேயம் மற்றும் உலக முடிவு பற்றியதாக இருந்தது. அவர் தாழ்மை, சாந்தம், பாவ மன்னிப்பு, கடவுள் நம்பிக்கை, முடிவில்லா விண்ணரசு போன்றவற்றையும் போதித்தார்.
இயேசு தனது போதனைகளின் போது யூத சமயத் தலைவர்களுடன் (பரிசேயர், சதுசேயர்) தர்க்கத்தில் ஈடுபட்டார். சதுசேயர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழல் இல்லை என நம்பினர். இயேசு இவ்விஷயதில் அவர்களோடு இணங்கவில்லை (மத்தேயு 22:23-32). பரிசேயருடனான் இயேசுவின் தொடர்பு சிக்கலானதாகும். இயேசு பரிசேயரை அவர்களது வெளி வேஷத்துக்காகக் கடிந்து கொண்ட (மத்தேயு 23:13-28) அதேவேளை அவர்களில் சிலரோடு ஒன்றாக உணவு அருந்தினார். (லூக்கா 7:36-50).
இயேசு பரிசேயரின் ஆலயங்களில் போதித்தார் (மாற்கு 23:1-3) மேலும் இயேசு பரிசேயரது போதனைகளை தன்னை பின்பற்றியவர்களுக்கு போதித்தார் (மத்தேயு 23:1-3). நிக்கோதேமு போன்ற பரிசேயர் இயேசுவின் சீடர் எனக் கொள்ளப்பட்டனர் (யோவான் 7:50-51).
கூடுதலான நேரங்களில் இயேசு அன்றைய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட, வரிவசூலிப்பவர் (உரோமை அரசுக்கு வரி வசூலிப்பவர்கள்) போன்றவர்களுடன் தனது நேரத்தை செலவழித்தார். பிரிசேயர் இதை பற்றி முறையிட்டபோது இயேசு, மருத்துவன் நோயாளிக்கே அதிகம் தேவை என்று பதிலளிக்கிறார் (மத்தேயு 9:9-13). இயேசு தனது போதனைகளை சமாரியாவுக்கும் விரிவுபடுத்தியிருந்தார் (யோவான் 4:1-42).
இயேசுவின் பகிரங்க வாழ்வின் இறுதியில், எருசலேமுக்கு கோலாகலமாக நுழைந்தார். இது யூத மாதப்படி நிசான் 15 ஆம் திகதியாகும். யோவான் நற்செய்தியின் (யோவான் 12:12-19) படி இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பாஸ்கா பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவரை எதிர்கொண்டுபோய் ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
பலர் தங்களது மேலாடைகளை அவர் வந்த வழியில் விரித்தனர். இயேசு கழுதை மேல் ஏறி எருசலேமுக்குள் ஓர் அரசர்போல நுழைந்தார்.