ஒரு கோடை விடுமுறை நாள்...
அந்தக் காலனியின் நடுவில் உள்ள மைதானத்தில் சிறுவர்கள் குவியத் துவங்கினர்.
கிழக்கு மூலையில் உள்ள வாதாம் மரத்திற்கு அடியில் அச்சுப் பார்த்து ஸ்டம்புகளை ஊன்றினான் ஆறாம் வகுப்புப் படிக்கும் கார்த்திக்.
பூவா தலையா போட்டு ஜோராகாத் தொடங்கியது ஆட்டம். அதிர்ஷ்டம் கார்த்திக்கின் பக்கம் இருந்ததால் அவனின் கைப்பிடியில் வந்தது மட்டை.
எதிரணித் தலைவன் சேகரின் கையில் சுழன்றது பந்து. பரபரப்பான கணங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் மற்ற வீரர்களும், வாய்ப்பிற்காகக் காத்திருந்த சிறுவர்களும்.
இதோ... சேகரின் கைகளில் இருந்து விடுபட்ட பந்து மைதானத்தில் பட்டுத் தெறிக்கிறது...
அதை லாவகமாகத் திருப்பி வானத்தை நோக்கித் தட்டுகிறான் கார்த்திக். அடுத்த வினாடி... படீர்...
மைதானத்திற்கு அருகில் இருந்த வீட்டின் ஜன்னல் தெறித்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் களத்தில் ஒருவரும் இல்லை. கார்த்திக்கைத் தவிர...
எல்லோரும் பயத்தினால் ஓடி விட்டனர். கார்த்திக்கிற்கும் பயம் வந்தது... இருந்தாலும் ஒரு குருட்டு தைரியம்...
மெதுவாக உடைந்த ஜன்னல் வீட்டிற்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்துவதற்குள் தயாராகக் கதவைத் திறந்தார் ஒரு பெரியவர்.
பார்த்து... பார்த்து... ஓரமா வா! கண்ணாடி காலில் குத்தப் போகுது...
அந்தப் பெரியவரின் அன்பு வார்த்தைகளைக் கேட்டதும் தன்னை அறியாமல் அழ ஆரம்பித்தான் கார்த்திக்.
சாரி தாத்தா... நான்தான் உங்க வீட்டுக் கண்ணாடிய ஒடைச்சுட்டேன்... தேம்பினான் அவன்.
அவனை அருகில் அழைத்த பெரியவர், விசாரித்து நடந்ததை அறிந்து கொண்டார். மற்றவர்கள் ஓடினாலும், குற்ற உணர்வு தாளாமல் வந்திருக்கும் கார்த்திக்கின் மனதைப் புரிந்துகொண்டார்.
''எங்க அப்பாவிற்கு சம்பளம் கிடைச்சதும் உங்களுக்கு கண்ணாடி வாங்கிக் குடுத்துடறேன்...'' என்று மீண்டும் கவலையாக சொன்னான் கார்த்திக்.
இந்தப் பையன் இவ்வளவு சின்ன வயசுலேயே இவ்வளவு உண்மையாகவும், மற்றவர்களுக்குக் கவலைப்படுபவனாகவும் இருக்கறானே என்று நினைத்தபடி கார்த்திக்கைத் தட்டிக் கொடுத்தார்.
"கார்த்திக் நான் உனக்கு எந்த தண்டனையும் தர முடியாது. இந்த கண்ணாடிக்கான செலவை நானே பார்த்துக் கொள்கிறேன்..'' என்றார்.
ஒரு முத்தத்தையும் ஒரு சாக்லேட்டையும் கொடுத்து, ''டா டா'' என்று சொல்லி அன்போடு அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தரையை சுத்தப்படுத்தத் துவங்கினார்.