சித்திரை... தமிழ் வருடத்தின் முதல் மாதம்... தமிழர் கொண்டாடும் திருநாள்... இப்படி பல சிறப்புகளை இந்நாள் கொண்டுள்ளது. எல்லா ஊடகங்களிலும் வழக்கம் போல் அளிக்கும் கட்டுரை, கதை, கவிதைக்கு இடையே என்னுடைய கட்டுரையையும் வாசகர்கள் படித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்...
சரி விஷயத்திற்கு வருவோம்... மற்ற கட்டுரைகளைப் போல் சித்திரையின் சிறப்பு என்பது போன்ற கட்டுரையோ, சித்திரையால் நித்திரை போச்சு என்ற எதுகை, மோனை கவிதையோ எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.
மாறாக இன்று உலக மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு நடவடிக்கையை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விவசாயத்திற்கு பெயர் போன நம் நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நிலைதான் உலகளவிலும் உள்ளது.
இயந்திரத்தனமான வாழ்க்கை காரணமாக பல்வேறு உணவு வகைகளை காணும் வாய்ப்பைக் கூட இன்றைய சந்ததிகள் இழந்துள்ளனர். அன்று 1000 வகைகளில் இருந்த அரிசி ரகங்கள், இன்று 10 அல்லது 15 ரகங்களாக குறைந்து விட்டன.
இதன் காரணமாக உலகில் உள்ள பல்வேறு பயிர், பருப்பு உள்ளிட்ட வகையாறாக்களில் பல காலச்சுழற்சியில் அழிந்து விட்டன. எனவே தற்போது உலகில் இருக்கிற பயிர் ரகங்களை பாதுகாக்க, சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து நார்வே நாட்டில் ஒரு விதை சேகரிப்பு பெட்டகத்தை ஏற்படுத்தியுள்ளன.
நார்வே நாட்டில் வடதுருவப் பகுதியில் உள்ள பனிமலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள விதைப் பெட்டகத்தில், உலகநாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு விதைகளை அனுப்பி வைத்துள்ளனவாம்.
சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த விதை பெட்டகத்தில் பல லட்சக்கணக்கான ரகங்களில் தரமான விதை சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடத்தை குளிரூட்ட தேவையான மின்சார சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஒருவேளை பிரளயம் ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், வடதுருவத்தில் இயற்கையிலேயே மைனஸ் டிகிரி வெப்ப நிலை நிலவுவதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை இங்குள்ள விதைகள் அழியாமல் இருக்கும்.
தற்போது ஏற்பட்டு வரும் புவி வெப்பம் உள்ளிட்ட கால நிலை மாற்றத்தாலும், பூகம்பம், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை இடர்களாலும் தற்போதுள்ள மனித இனத்தில் பெரும் பகுதி அழிந்தாலும், மீதமுள்ள மனிதர்கள் ஆர்டிக்கில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள விதைகளை எடுத்து, விவசாயம் செய்து மீண்டும் தழைக்க வேண்டியதுதான்.
எனவே, குரங்கிலிருந்து மனிதனாக மாறியதாக கூறப்படும் மனித இனம், மீண்டும் குரங்கு நிலையை நோக்கி பின்னோக்கி செல்லும் காலம் ஏற்படாமல் தவிர்க்க, தற்போதைய (!) மண்ணின் மைந்தர்களாகிய நாம் எதிர்காலச் சந்ததிகளுக்கு தேவையான இயற்கை வளங்களை விட்டு வைத்துவிட்டு (சேர்த்து வைக்காவிட்டாலும்) செல்வதே நியாயமானதாக இருக்கும்.
அதற்காக உங்கள் அனைவரையும் வயல் காட்டில் உழுது விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்த மாட்டேன். மாறாக நாம் அன்றாடம் செய்யும் விஷயங்களில் சிலவற்றை விழிப்புடன் செய்தாலே போதும்.
உதாரணமாக மின்சாரத்தை சேமியுங்கள்... இது எப்படி என்பதை பல சிறப்பான விளம்பரங்கள் மூலம் குழந்தைகளுக்கு சொல்வது போல் சொல்லியாகி விட்டது. இருப்பினும் எனக்கு பிடித்த வழியில் சொல்கிறேன்.
'Energy Saved is Energy PRODUCED' வாசகம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மின்சாரம் தேவையில்லாத போது அதனை பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்... அந்த மின்சாரத்தை தயாரிக்க பயன்படும் நிலக்கரியை மிச்சப்படுத்தலாம்.
அதேபோல் தண்ணீர், பால் உள்ளிட்டவற்றை சுடேற்றும் போதும், காய்கறி, அசைவ உணவுகளை சமைக்கும் போதும் தேவையான சூடு கிடைத்த பின்னர் உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். இதனால் திரவ நிலை பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.) மிச்சமாகும்.
தெருமுனையில் உள்ள கடைக்கு செல்வதாக இருந்தால் கூட, பந்தாவாக பைக்கில் செல்லாமல், காலாற நடந்து சென்றால், பெட்ரோலை மிச்சம் செய்வதுடன், உடலுக்கு உடற்பயிற்சி கொடுத்தது போல இருக்கும்.
பாலிதீன் என்றழைக்கப்படும் ஞெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிருங்கள். அப்படி முடியாவிட்டால் அவற்றை கண்ட இடங்களில் கொட்டாமல், குப்பை தொட்டிகளில் மட்டுமே போடுங்கள். இதன் மூலம் அவை மறுசுழற்சி முறைக்கு அனுப்பப்படும்.
இப்படி நம்மால் முடிந்த வகையில் பல இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு மிச்சம் வைத்து விட்டு செல்ல முடியும்!