Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்லவனும் கெட்டவனும்

குழந்தைகள் கவிஞர் அழ. வள்ளியப்பா

நல்லவனும் கெட்டவனும்
, புதன், 19 பிப்ரவரி 2014 (19:29 IST)
தமிழகத்தின் பிரபலமான குழந்தைகள் கவிஞரும், நவீன தமிழ் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவருமான அமரர் அழ. வள்ளியப்பா எழுதிய கவிதை
FILE

ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.

எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.

ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.

ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்

கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.

பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;

மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.

பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.

'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.

பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.

ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.

கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ

நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென

அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.

Share this Story:

Follow Webdunia tamil