நமது தெனாலிராமனைப் பற்றி எல்லோரும் நன்கு அறிவர். அவரது சமயோஜித புத்தியால் பல இன்னல்களில் மாட்டிக் கொண்டாலும் மற்றவர்களை மாட்டிவிட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்வது இவரது வழக்கம்.
இதற்கு ஒரு சான்றாக கதை ஒன்றை உங்களுக்குக் கூறுகிறோம்.
கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாட்டிய நாடகத்தைக் காண அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாடக நிகழ்ச்சியில் அரசி உள்ளிட்ட மாதரும், முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வதால், இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் வந்து ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை கெடுத்துவிடுவான் என்று எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.
நாடகம் நடைபெறுவதை அறிந்ததும் தெனாலிராமனால் உள்ளே செல்லாமல் இருக்க முடியுமா? ஏதாவது தந்திரம் செய்து போய் விடுவது என்று எண்ணிக் கொண்டே நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான், வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.
இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் பாதி பரிசு கிடைக்கும் என்ற பேராசையால் தெனாலிராமனை உள்ளே விட்டான்.
அரங்கத்திற்குள் செல்ல வேண்டிய மற்றொரு வாயிலில் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போன் நின்றிருந்தான். அவனிடமும், பாதிப் பரிசு தருவதாக உறுதி கூறினான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து தெனாலிராமனை உள்ளே விட்டுவிட்டான்.
அரங்கத்தினுள் நுழைந்த தெனாலிராமன் ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணனாக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கொம்பால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறித் துடித்தான்.
இதைப்பார்த்த மன்னருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனை அழைத்து வரச்செய்து, ஏன் இவ்வாறு செய்தாய் என வினவினார். அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்று பதிலுரைத்தான். இந்த பதிலைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் என்று கூறினான்.
உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்தார். வாயிற்காப்போன்களும் பரிசு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் மன்னரை நோக்கி வந்தனர். தெனாலிராமன் கூறியது பற்றி வாயிற்காப்போன்களிடம் விசாரித்தார். அவ்விருவரும் ஒத்துக் கொண்டதை அடுத்து, இருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார்.
பரிசு பெற வந்த இடத்தில் கசையடிப் பெறுவதை எண்ணி வேதனைப் பட்டனர் வாயிற்காப்போன்கள்.தெனாலி ராமன் சமயோஜித புத்தியால் தப்பிச் சென்றுவிட்டார்.