ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனின் நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.
செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார்.
அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார்.துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.
மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார்.அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.
இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார்.மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பதுபோல் கையை இறக்காமல் நின்றனர்.
கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், கசங்கி இருந்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை.அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது.ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான்.அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது, அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார்.
ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.