சின்ன வயசில் படித்த தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதையின் நவீன வடிவம் தான் இந்தக் கதை.
குரங்குகளிடம் மாட்டிக் கொண்டு சாமர்த்தியமாக தப்பித்த தொப்பி வியாபாரின் காலம் முடிந்து அவரது எள்ளுப் பேரன், தாத்தாவைப் போலவே தொப்பி வியாபாரம் செய்கிறான்.
வியாபாரத்துக்காக வெளியூர் சென்றபோது, நிழலுக்காக தாத்தா ஒதுங்கிய அதே மரத்தின் கீழ் இவனும் ஒதுங்க வேண்டி வருகிறது. தாத்தா போலவே தூங்கியும் விடுகிறான்.
தாத்தா காலத்தைப் போலவே மரத்தின் மேலிருக்கும் குரங்குகள் இறங்கி வந்து அவனது கூடையிலிருந்த தொப்பிகளையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் விடுகின்றன.
தூக்கம் கலைந்தவன், தன் தொப்பிகள் பறிபோனதைப் பார்க்கிறான். ஆனால், தான் தாத்தா சொன்ன கதை நினைவுக்கு வர, உள்ளூர ஒரு தெம்பு வருகிறது.
தாத்தா காலத்து வித்தை பலிக்கிறதா என்று பார்க்க, குரங்குகளைப் பார்த்தபடி தன் தலையை தேய்க்கிறான். என்ன ஆச்சரியம், மரத்திலிருந்த குரங்குகளும் அப்படியே தலையைத் தேய்த்தன.
இனி பிரச்னை இல்லை என்று உற்சாகமானவன் தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வீசினான். குரங்குகளும் அந்த தொப்பிகளை வீசும் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை. குரங்குகளிடம் அசைவில்லை.
ஒரு குரங்கு மட்டும் மின்னல் வேகத்தில் இறங்கி வந்து அவன் வீசிய தொப்பியையும் எடுத்துக்கொண்டு போய்விட்டது.
மேலே போன அந்த குரங்கு அவனிடம் சொன்னது... ''உங்களுக்கு மட்டும்தான் தாத்தாக்கள் இருக்கிறார்களா? எங்களுக்கும் உண்டு!"
எனவே குழந்தைகளே, பள்ளி விடுமுறையில் ஊருக்குச் செல்பவர்கள், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே காலத்தைப் போக்காமல் தாத்தா, பாட்டிகளிடம் கதை கேளுங்கள். நிறைய அறிந்து கொள்வீர்கள்.