குழந்தைகளா நாளை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த வாரம் கிருஷ்ணர் என்று அழைக்கப்படும் கண்ணனின் கதையை உங்களுக்கு சொல்லப் போகிறார் வாசுகி பாட்டி.
என்ன கதையை ஆரம்பிக்கலாமா?
தாஜ்மஹால் என்றால் எல்லோருக்குமேத் தெரியும் அல்லவா? அந்த உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவுக்கு அருகில் உள்ளது மதுரா நகரம். இந்த நகரத்தில்தான் தேவகி - வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார்.கிருஷ்ணர் பிறந்தது ஒரு சிறிய சிறைச்சாலையில். அந்த சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வாழ்ந்த யசோதையால் வளர்க்கப்பட்டான்.இப்படி மதுராவில் பிறந்த கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், தனது தாய் மாமனான கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் பரமாத்மா.
கிருஷ்ணர் பிறந்த அந்த சிறியச் சிறைச்சாலையின் மீது கத்ரகேஷப் தேவ் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே உள்ளது. கண்ணன் பிறந்த இடமாக அது வழிபடப்படுகிறது.என்ன குழந்தைகளா கிருஷ்ண அவதாரம் பற்றி சிறிது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? சரி அடுத்த வாரம் சந்திப்போம்கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.