சிறுக சிறுக பெருகி வரும் ஹிந்தியின் இன்றியமையாமை!
சிறுக சிறுக பெருகி வரும் ஹிந்தியின் இன்றியமையாமை!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மொழியாம் தமிழ் என தமிழை அனைத்து மொழிகளுக்கும் முன்னதாக தோன்றிய மொழி என வர்ணிப்பர். அத்தனை சிறப்பம்சங்கள் மிக்க தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டுள்ள தமிழகத்தில் இந்தியாவில் பெரும்பாண்மையான மக்களால் பேசப்படும் ஹிந்தி மொழியை திணிக்க நடந்த முயற்சிகளின் போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த எதிர்ப்புகளின் காரணமாக தற்போதைய தமிழ் இளைஞர்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாக தமிழ் மாணவர்கள் மத்தியில் பரவலாக கருத்து உள்ளது. தாங்கள் வெறும் தமிழை மட்டும் வைத்துக்கொண்டு தற்போதுள்ள அதிவேகமான வாழ்க்கையில் பிற மாநில மாணவர்களோடு ஒரே நீரோடையில் பயணிக்க முடியவில்லை என்கிறார்கள்.
அலுவல் ரீதியாகவும், படிப்பு ரீதியாகவும் பிற மாநிலங்களில் செல்லும் இளைஞர்கள் ஹிந்தி தெரியாமல். அங்குள்ளவர்களால் எள்ளி நகையாடப்படுகிறார்கள். ஏன் சொந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கூட தங்களுக்கு தெரிந்த தமிழ் மொழியை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
ஒரு வகுப்பறையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்திய மாணவர்களுடன் ஒரு தமிழ் மாணவன் படிக்கும் போது அங்கு மொழிப்பிரச்சணையை எதிர் கொள்வது தமிழ் மாணவன் தான். சக மாணவர்களுடன் தன்னுடைய கருத்தை கூட அவனால் எடுத்து சொல்ல முடியாத நிலை உள்ளது.
அரசியல் கட்சிகள் ஹிந்தி தமிழகத்தில் வருவதை எதிர்த்தாலும், அதன் தேவை கருதி அதனை படிக்க இருக்கும் மாணவர்கள் அதனை ஆதரிக்கவே செய்கிறார்கள். சமீபத்தில் ஹிந்தி பாடம் தமிழகத்திற்கு தேவையா என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அதிகப்படியான மாணவர் ஹிந்திக்க ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தை அடுத்து ஹிந்தியையும் மூன்றாவது விருப்ப பாடமாக எடுத்து படிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகின்றனர். ஹிந்தி தமிழகத்தில் அன்னிய மொழி என்பது மாறி அது நமது சகோதர மொழி என்பதை உணர்ந்து மாணவர்கள் படிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் சிறுக சிறுக இந்தி வேரூன்ற ஆரம்பித்துள்ளதை உணரலாம். காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது தானே சாலச்சிறந்தது.